மீராபாய் சானுவுக்கு பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது!!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (12:45 IST)
2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த மீராபாய், தனது விளையாட்டு வாழ்க்கையின் தொடக்க காலத்தில், பல நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டவர்.
 
விருதை வென்ற பிறகு, பிபிசிக்கு நன்றி தெரிவித்த மீராபாய் சானு, "தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறேன். இந்த ஆண்டு ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். மீண்டும் ஒருமுறை இந்த விருதை வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி தெரிவிக்கிறேன்." என்றார்.
 
டெல்லியில் நடந்த பிபிசி விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவில் விளையாட்டு, அரசியல் துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
 
இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா இந்த விருதை வழங்கினார். இந்த விருது தமக்கு மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக கர்ணம் மல்லேஸ்வரி தெரிவித்தார்.
 
முன்னதாக பிபிசி வளர்ந்துவரும் வீராங்கனை விருது கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மாவுக்கு வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டில் இந்திய பெண்கள் டி-20 அணியில் பங்கேற்று சர்வதேசப் போட்டிகளில் ஷஃபாலி வர்மா விளையாடினார்.
 
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 
 
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிபிசியின் தலைமை இயக்குநர் டிம் டேவி, "மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள். அவர் ஒரு சிறந்த வீராங்கனை. இந்த விருதை வென்றிருக்கிறார். டெல்லியில் பிபிசியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்தத் தருணத்தில் சவால்களைக் கடந்த இப்படியொரு திறமையான வீராங்கனையை கவுரவிக்கும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது." என்றார்.
 
வளர்ந்துவரும் வீராங்கனை விருதைப் பெற்ற ஷஃபாலி வர்மா, "அடுத்த 20 முதல் 25 ஆண்டுகள் வரை விளையாடுவேன் என நம்புகிறேன். இந்திய அணிக்கு முடிந்த அளவு வெற்றிகளைப் பெற்றுத் தருவதே எனது இலக்கு" என்றார்.
 
பிபிசியின் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றோருக்கும், பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றோருக்கும் பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
 
"ஒலிம்பிக்காக இருந்தாலும் பாராலிம்பிக்காக இருந்தாலும் பெண்கள் நமது நாட்டுக்கு எப்போதும் பெருமை சேர்க்கின்றனர். இந்த விருதுகளை வழங்குவதற்காக பிபிசிக்கு நன்றி" என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா கூறியிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 
வெற்றியாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார்?
 
பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதி பட்டியலைத் தொகுத்தது. நடுவர் குழுவில் இந்தியா முழுவதும் உள்ள மிகச் சிறந்த விளையாட்டு செய்தியாளர்கள், வல்லுநர்கள் மற்ரும் எழுத்தாளர்கள் இருந்தனர்.
 
நடுவர் குழு உறுப்பினர்களால் அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற முதல் ஐந்து விளையாட்டு பெண்களில் தங்களுக்குப் பிடித்த வீராங்கனையைத் தேர்வு செய்ய, பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 22 வரை பொதுமக்கள் ஆன்லைனில் வாக்களித்தனர்.
 
கடந்த 2020ஆம் ஆண்டில், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார். அதோடு, மனு பாக்கர் பிபிசியின் வளர்ந்து வரும் இந்திய வீராங்கனையாகத் தேர்வு செய்யப்படார்.
 
வாழ்நாள் சாதனையாளர் விருது, அஞ்சு பாபி ஜார்ஜுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.
 
பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள்: 
 
அதிதி அசோக்
அதிதி அசோக், 2016இல் தொழில்முறை கோல்ஃப் வீரராக ஆனதில் இருந்து பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அடையாளமாக இருந்து வருகிறார்.
 
18 வயதில், அதிதி 2016ஆம் ஆண்டில் ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அணியில் இளைய உறுப்பினராகவும் முதல் பெண் கோல்ஃப் வீரராகவும் இருந்தார்.
 
23 வயதான அவர் டோக்யோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்தார். கோல்ஃப் விளையாட்டில் அதிதியின் வெற்றி, உலகளவில் இந்தியா குறைந்த வெற்றியையே கண்டுள்ள விளையாட்டான கோல்ஃப் மீது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
 
அதிதி, 2016-ஆம் ஆண்டில் பெண்கள் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் வென்ற முதல் இந்திய வீராங்கனையும் ஆவார். டிசம்பர் 20, 2021 நிலவரப்படி, அதிதி உலக தர வரிசையில் 125-வது இடத்தில் உள்ளார்.
 
அவனி லேகரா
 
20 வயதான அவனி லேகரா, பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். டோக்யோவில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச்1 பிரிவில் அவர் புதிய பாராலிம்பிக் சாதனையைப் படைத்துள்ளார்.
பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 50மீ ரைஃபிள் 3-பொசிஷன்ஸ் எஸ்ஹெச்1-இல் அவனி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
 
குழந்தைப் பருவத்தில் ஒரு பெரிய கார் விபத்து அவரை இடுப்பிற்குக் கீழே முடக்கியது. விபத்திற்குப் பிறகு அவரது தந்தை அவரை துப்பாக்கிச் சுடுதலுக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவனி, விளையாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். கூடவே சட்டமும் படித்து வருகிறார்.
 
லோவ்லினா போர்கோஹைன்
 
டோக்யோ விளையாட்டுப் போட்டியில், லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்று, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர்.
 
லவ்லினா பல்வேறு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2018-ஆம் ஆண்டு நடந்த தொடக்க இந்திய ஓபனில், அவர் தங்கம் வென்றபோது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு, அவர் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாடினார்.
 
வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்த 24 வயதான லவ்லினா, தனது இரண்டு மூத்த சகோதரிகளிடமிருந்து கிடைத்த உத்வேகத்தால், குத்துச்சண்டை வீராங்கனையாக உருவாகினார்.
 
மீராபாய் சானு
 
2021ஆம் ஆண்டு டோக்யோ ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சாய்கோம் மீராபாய் சானு. இதன் மூலம், அவர் விளையாட்டு வரலாற்று பக்கங்களில் தனது பெயரைப் பதித்தார்.
 
2016ஆம் ஆண்டு, ரியோ விளையாட்டுப் போட்டிகளில் பளுதூக்க தவறியதில் இருந்து, அவர் வெகுதூரம் வந்திருக்கிறார். அப்போது, விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட விடைபெறும் நிலையில் இருந்தார். 2017ஆம் ஆண்டு, உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த மீராபாய், தனது விளையாட்டு வாழ்க்கையின் தொடக்க காலத்தில், பல நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார். ஆனால், அவர் ஒலிம்பிக் சாம்பியனாவதற்கு அனைத்து இடையூறுகளையும் முறியடித்தார்.
 
பளு தூக்குதல் சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு, 2021-ஆம் ஆண்டில் டோக்யோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
 
2016-ஆம் ஆண்டு ரியோ விளையாட்டுப் போட்டிகளில் எடையை உயர்த்தத் தவறினார். இப்போது அதிலிருந்து வெகுதூரம் வளர்ந்துவிட்ட அவர், கிட்டத்தட்ட விளையாட்டுகளில் இருந்து விடை பெற்றார். 2017 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்.
 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிபூரில், தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்த மீராபாய், தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நிறைய நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டார். ஆனால், அவர் ஒலிம்பிக் சாம்பியன் ஆவதற்காக, அனைத்து தடைகளையும் தாண்டிவிட்டார்.
 
பிவி சிந்து
 
பேட்மின்டன் வீராங்கனை புசர்லா வெங்கட சிந்து ஒலிம்பிக் போட்டியில், தனிநபருக்கான இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண். டோக்யோ விளையாட்டு போட்டியில் வென்ற வெண்கலம், அவரது இரண்டாவது ஒலிம்பிக் வெற்றியாகும் - அவர் 2016ஆம் ஆண்டு, ரியோ விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றார்.
 
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) உலக சுற்றுப் பயண இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் 2021 ஆம் ஆண்டை நிறைவு செய்தார். 2019ஆம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சிந்து. 2012 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தனது 17 வயதில் பி.டபள்யூ.எஃப் (BWF) உலக தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தவர் பி.வி.சிந்து
 
2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் சிந்துவும் இருந்தார். இந்தச் சாதனையை எட்டிய ஒரு சில இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் இவரும் ஒருவர். அவர் பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டிற்கான தொடக்க பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்