கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிறிஸ் ராக்கை அவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் வில் ஸ்மித் விருதைப் பெறுவதற்கு முன்பு நடந்தது. உண்மையில், நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை கிறிஸ் ராக் உடல் ரீதியாக கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார். இது ஆஸ்கர் மேடையில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது.
இதையடுத்து இந்த சம்பவத்தில் தான் எல்லை மீறிவிட்டதாக வில் ஸ்மித் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பல விதமான கருத்துகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகை சமந்தா இது சம்மந்தமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் எவர் ஒருவரும் மற்றவரை உடல் ரீதியாக தாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதற்கான பதில் இப்படி உடல் ரீதியான தாக்குதலாகதான் இருக்க வேண்டுமா?. யாராக இருந்தாலும் இதை வேறு விதமாக எதிர்கொண்டு இருக்கலாம். வார்த்தைகளால் எதிர்கொண்டு இருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் கிறிஸ் ராக்கிடம் பேசி இருக்கலாம் எனத் தனது கருத்தைக் கூறியுள்ளார்.