அமெரிக்காவுக்கு சீனா இன்னொரு சோவியத் யூனியனா? இது இன்னொரு பனிப்போர

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (00:03 IST)
அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த பொறுப்பு வகிப்பவர்கள் மற்றும் சீன அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆகியோரின் சந்திப்பு இருநாட்டு உலகின் இரண்டு முக்கியமான நாடுகளுக்கு இடையேயான உறவை செய்துகொள்வதற்கான முதல் நேருக்கு நேர் வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி பிலின்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் சீனாவின் உச்சபட்ச வெளியுறவு அதிகாரி யாங் செய்ச்சி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரை வியாழனன்று அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர்.
 
இந்த சந்திப்பின்போது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப்படாது என்று கூறிய அமெரிக்க வெளியுறவுச் செயலர் இந்த சந்திப்புக்கு பிந்தைய நடவடிக்கைகளைத் தொடர்வது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையிலேயே பல்லாண்டுகளாக நீடிக்கிறது. தற்போதைய சூழலிலும் அதில் எந்த முன்னேற்றமும் காணப்படுவதாக தெரியவில்லை.
 
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், பைடன் அரசின் ஆசிய விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராக உள்ள கர்ட் கேம்ப்பெல் உடன் சேர்ந்து ஃபாரின் அஃபயர்ஸ் சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை சில காலத்துக்கு முன்பு எழுதி இருந்தார். அதில் சீனாவுடனான தொடர்புகளுக்கான சகாப்தம் முடிந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே இருந்த மோதல் 'பனிப்போர்' என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அந்த பதம்தான் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
 
வரலாற்று ரீதியான ஒப்பீடுகள் தற்போதைய தேர்வுகள், சூழ்நிலை மற்றும் குழப்ப நிலை ஆகியவற்றை தெளிவுபடுத்த உதவும் என்று என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் இதுவே ஆபத்தாகவும் முடியலாம்.
 
பனிப்போர் காலகட்டம் போன்ற வரலாறு திரும்பவும் நிகழாமல் வேறு மாதிரியான வெளிப்பாடுகளும் உண்டாகலாம்.
 
ஒன்றுடனொன்று ஒத்துவராத இருவேறு அரசியல் அமைப்பு முறைகள் மோதிக்கொள்ள, அந்தந்த நாடுகளின் அரசுகளின் அனைத்து அமைப்புகளும் பயன்படுத்தப்படுவது 'பனிப் போர்' என்று கூறப்பட்டால் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே இருந்த எதிர்ப்புணர்வே சீனா மற்றும் அமெரிக்கா இடையே தற்போது உள்ளது என்று கூறலாம்.
 
பைடனின் புதிய நிர்வாகம் தனது இடைக்கால வெளியுறவு கொள்கையை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பொருளாதாரம், வெளியுறவு, ராணுவம் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் அமெரிக்காவிற்கு இருக்கும் வல்லமைக்கு சவால்விடும் வகையில் சர்வதேச நிலைத் தன்மையை மாற்றக் கூடிய ஒரே சர்வதேச போட்டியாளராக சீனாவை குறிப்பிட்டுள்ளது.
 
சீனாவுடன் எந்தெந்த இடத்தில் ஒத்துழைக்க வேண்டுமோ அங்கு ஒத்துழைத்து எங்கெல்லாம் ஒன்றாக இயங்க வேண்டுமோ அங்கெல்லாம் ஒன்றாக இருப்பதே பைடன் தலைமையிலான வெள்ளை மாளிகையின் மந்திரமாக இருக்கும்.
 
சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான உறவை வைத்துக் கொள்ளவே விரும்புகிறது.
 
அதேசமயம் அமெரிக்கா விமர்சிக்கும் விவகாரங்களிலும் தனது இறுக்கத்தை அதிகரித்து வருகிறது.
 
'நிம்மதியாக இருக்க விரும்பினால்' - அமெரிக்காவை எச்சரிக்கும் கிம்மின் சகோதரி
நல்லேலி கோபோ: எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்துப் போராடி வென்ற ஒன்பது வயது சிறுமி
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி
ஹாங்காங்கில் நடைபெறும் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களை கட்டுபடுத்துவது, அமெரிக்க அதிபர் அரசின் வெளியுறவு செயலராக உள்ள ஆண்டனி பிலின்கன் இனப்படுகொலை என்று வர்ணித்த வீகர் இன முஸ்லிம்களின் மீதான நடவடிக்கைகள் ஆகியவற்றை சீன அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
 
அமெரிக்காவில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டுவதற்காக வாய்ப்புகளை சீன அரசு இயன்றவரை தவறவிடாமல் தான் இருக்கிறது. டிரம்ப் அதிபராக இருந்தபோது அங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது, அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை விமர்சித்த சீன அரசு தங்களது சமூக மற்றும் பொருளாதார மாதிரிதான் மேம்பட்டது என்று கூறியது.
 
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்க தரப்பால் தள்ளி வைக்கப்பட்டன. அவர்களுக்கு கடுமையான வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போதைய சூழ் நிலை அப்படி இல்லை.
 
சீனா சர்வதேச பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் கூட சீன பொருளாதாரத்துடன் ஆழமான தொடர்புகளை கொண்டதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
 
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் ஆயுதம் மற்றும் விண்வெளி ஆகிய தொழில்நுட்ப துறையில் தான் போட்டி நிலவியது.
 
 
தற்போது சீனா மற்றும் அமெரிக்கா இடையே எதிர்கால தொழில்நுட்பங்களான 5ஜி தொலைத் தொடர்பு வசதி செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் போட்டி நிலவுகிறது.
 
பனிப்போர் காலகட்டத்தில் இந்த உலகமே இரு முனைகளில் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று அமெரிக்காவுக்கு ஆதரவான நாடுகள். மற்றொன்று சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவான நாடுகள்.
 
இவை அல்லாமல் அணிசேரா நாடுகளும் இருந்தன. ஆனால் இந்த அணி சேரா நாடுகள் சோவியத் ஒன்றியத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தவை என்று மேற்குலகம் நினைத்தது.
 
ஆனால் தற்போது அந்த சூழ்நிலை இல்லை. எந்த இரு நாடுகளின் பின்னணியிலும் இல்லாமல் பல்வேறு வழிகளிலும் வலிமை பெற்றவையாக உலகின் பல்வேறு நாடுகளும் தங்களை நிலைப்படுத்திக் கொண்டுள்ளன.
 
இது தங்களது சர்வதேச நிலைப்பாட்டை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக சீனாவுக்கு அமைந்துள்ளது.
 
ஆனால் அடிப்படையிலேயே பனிப்போர் காலகட்ட மாதிரி மிகவும் ஆபத்தானதாக இருந்தது. ஏனென்றால் அப்போது இருந்த ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் அரசியல் போராட்டங்களை ஏற்றுக் கொள்ள மறுத்து வந்தது.
 
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை என்றாலும் இவர்களின் சார்பில் நடத்தப்பட்ட போலியான சண்டைகளில் பல உயிர்கள் பறிபோயின.
 
இறுதியில் ஒரு தரப்பு வீழ்ந்து, சோவியத் ஒன்றிய அமைப்பு வரலாற்றுப் பக்கங்களில் புதைந்து போனது.
 
 
அதே மாதிரியான கண்ணோட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான எதிர்ப்புணர்வை பார்ப்பது இரு தரப்புக்கும் தவறாகிவிடும் என்று கருதப்படுகிறது.
 
தங்களது அமைப்பு முறை சர்வதேச அளவில் விடப்படுவதை தவிர்ப்பதற்காக சீன அரசு எந்த எல்லைக்கும் செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.
 
சீனா சோவியத் ஒன்றியம் அல்லதான். ஆனால் தற்போது சீனா மிகவும் வலிய நாடாக இருக்கிறது.
 
சோவியத் ஒன்றியத்தில் உச்சபட்ச வலிமை இருந்தபொழுது அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% தான் இருந்தது. ஆனால் இன்னும் பத்தாண்டு காலத்தில் சீனா அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை சமன் செய்யக் கூடியதாக இருக்கும்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் அமெரிக்கா எதிர்கொண்ட வேறு எந்த போட்டியாளரை விடவும் சீனா மிகவும் வலிமையான நாடாக இருக்கும். அதனால் இனி வரும் தசாப்தங்களில் இந்த உறவை நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கும்.
 
சீனா ஏற்கனவே அமெரிக்காவிற்கு பல்வேறு துறைகளில் போட்டியாளராக வந்து நிற்கிறது.
 
சீனா இன்னும் முழுமையாக சர்வதேச வல்லாதிக்க நாடாக உருவாக வில்லை என்றாலும் கூட அமெரிக்காவிற்கு ராணுவ எதிரியாக தற்போது உருவாகியுள்ளது.
 
இந்த விவகாரம் சீனாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
புதிய அதிபர் பைடன் முன்பு உள்ள பிரச்சனை மிகவும் சிக்கலானது.
 
ஏனென்றால் நியாயமான வர்த்தக கொள்கைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றில் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே புவி வெப்பநிலை மாற்றம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை உண்டாக்கும் முயற்சி உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
 
இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் போட்டியை குறைத்து மதிப்பிடக் கூடாது அதே சமயம் கூடுதலாகவும் மதிப்பிடக்கூடாது.
 
இப்போதைய சூழ்நிலையில் டிரம்ப் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளிலிருந்து தன்னை தானே சீரமைத்துக் கொள்ள வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது.
 
இது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இழந்த நம்பகத்தன்மையை மீண்டும் அமெரிக்கா தனதாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
 
பல வழிகளில் அமெரிக்க அரசை சீன அரசு முந்திச் செல்கிறது. ஆனால் சீனாவின் சர்வாதிகார தன்மை அதன் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
 
முன்பு இருந்ததைவிட சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.
 
சீனாவில் வேலைக்கு செல்ல முடியாத முதியவர்களின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.
 
நீண்டகால அடிப்படையில் தனக்கான விசுவாசத்தை தக்கவைத்துக்கொள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
 
சொல்லப்போனால் சீனாவுக்கு வலிமை அதிகமாக இருந்தாலும் அதற்குரிய ஆபத்தான பக்கங்களும் உள்ளன .
 
அமெரிக்காவுக்கு அமெரிக்காவுக்கு வலிமையற்ற பக்கங்கள் இருந்தாலும் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான தன்மை அந்த நாட்டுக்கு இருக்கிறது.
 
ஆனால் சமீபத்திய கொரோன வைரஸ் பெருந்தொற்று இந்த உலகுக்கு உணர்த்தியது ஒன்றுதான்.
 
சீனாவில் என்ன நடந்தாலும், அது சீனாவில் மட்டும் முடிந்து விடப் போவதில்லை. சீனா தற்போது சர்வதேச பங்காற்றி வருகிறது. எனவே அது நம் அனைவரின் வாழ்விலும் தாக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கிறது.
 
புவி அரசியலில் இன்னும் கரடுமுரடனா பயணம் வரவுள்ளது. இது ஒரு தொடக்கம்தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்