வர்த்தகப் போரில் அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த முதல் பதிலடி

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (12:50 IST)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 1 அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் உடனான சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வெளிப்படையான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.



"பாதுகாப்பு சுவர்களுக்கு மத்தியில் தீர்வு கிடைக்காது. ஆனால், மாற்றத்தை அரவணைப்பதன் மூலம் கிடைக்கும்," என்று அப்போது கூறிய மோதி, "அனைவருக்கும் சம வாய்ப்புள்ள களமே நமக்குத் தேவை. திறந்த மற்றும் நிலையான சர்வதேச வர்த்தகத்தையே இந்தியா விரும்புகிறது," என்று பேசினார்.

எனினும், சர்வதேச வர்த்தகத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா பெரியண்ணனாக இருக்கவே விரும்புகிறது. இம்முறை, இந்தியா தனது செய்தியை உரக்க சொல்லியுள்ளது.



அமெரிக்காவின் பொருளாதார தற்காப்புக்கு எதிராக பழிக்கு பழி நடவடிக்கையாக, இந்தியா சில பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. இது மெல்லிய அடி அல்ல.படத்தின் காப்புரிமை "உடனடி நடவடிக்கை தேவைப்படும் சூழல் தற்போது நிலவுவதாக," இந்திய அரசு வெளியிட்டுள்ள வரி உயர்வு அறிவிக்கை தெரிவிக்கிறது.


ஆப்பிள், பாதாம், முந்திரி, சுண்டல்,இறால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் ஸ்டீல் பொருட்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை இந்தியா அதிகரித்துள்ளது. புதிய வரி விகிதம் 20% முதல் 90% வரை உள்ளன.

ஒரு கிலோ ஓடு நீக்கப்படாத பாதாமுக்கு 35 ரூபாயாக இருந்த வரி தற்போது 42 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ஓடு நீக்கப்பட்ட பாதாமுக்கு ஒரு கிலோவுக்கு 100 ரூபாயாக இருந்த வரி 120 ரூபாய் ஆகியுள்ளது.

முன்பு 50% ஆக இருந்த ஆப்பிள் மீதான இறக்குமதி வரி 75% ஆகியுள்ளது. முந்திரியின் இறக்குமதி வரி 30%த்தில் இருந்து 120% ஆகியுள்ளது.

இதனால் இந்தியாவுக்கு என்ன ஆகும்?


அமெரிக்க உணவுப் பொருட்களை வாங்க இனி இந்தியர்கள் அதிகம் செலவிட வேண்டும். ஆசியாவின் மிகப்பெரிய உளர் பழச் சந்தையான இந்தியாவின் வர்த்தகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாதாமில் 80% அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

59 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் உள்ள கன்வர்ஜீத் பஜாஜ் இதுவரை இத்தகைய அதிகமான வரியைக் கண்டதில்லை என்கிறார்.

"ஆண்டுக்கு 90,000 டன் பாதாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகிறது. இனிமேல் இதில் 50% சரியும். இனி ஆஸ்திரேலியா, ஸ்பெயின், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்குவார்கள். சில்லறை விலையில் வாங்கும் இந்திய நுகர்வோர் இனி கிலோவுக்கு 100 ரூபாய் அதிகம் செலவிட வேண்டியிருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

வரி விகிதம் குறைக்கப்படாவிட்டால் சட்டவிரோத வழிகளில் இந்தியாவுக்கு பாதாம் கொண்டுவரப்படும் என்று வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.

"இந்திய ஆப்பிள்களைவிட அமெரிக்க ஆப்பிள்கள் தரமானவை. தரமான சரக்கு சந்தையில் இல்லாததால் இந்திய விவசாயிகள் தங்களுக்கு போட்டி இல்லை என்று கருதி தரத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள்," என்கிறார் புதுடெல்லியில் உள்ள உணவுப் பொருட்கள் சந்தைப்படுத்தல் நிபுணர் கீத் சுந்தர்லால்.

இந்திய ஏற்றுமதியாளர்கள் என்ன ஆவார்கள்?

ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்கள் மீது அமெரிக்கா முறையே 25% மற்றும் 15% வரி விதித்ததால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


மூன்றாம் தலைமுறை தொழில் அதிபரான பிரீத் பால் சிங் சர்னா, ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான பாத்திரங்களை ஏற்றுமதி செய்கிறார். 70 ஆண்டுகளில் முதல் முறையாக தனக்கு வர்த்தகம் சரியும் என்று அவர் கருதுகிறார்.

"எங்கள் மொத்த ஏற்றுமதியில் 25-30% அமெரிக்காவுக்கு போகிறது. கடந்த ஒன்றரை மாதங்களாக அமெரிக்கர்கள் சற்று பழமைவாத வர்த்தக முறையைப்பின்பற்றுகிறார்கள். யாரும் அதிக அளவில் வர்த்தகம் செய்ய விரும்பவில்லை. வர்த்தகப் போரில் சிக்கிக்கொள்வோம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்," என்கிறார் அவர்.

அடுத்தது என்ன?

அமெரிக்காவின் கொள்கை குறித்து உலக வர்த்தக அமைப்பில் ஏற்கனவே இந்தியா புகார் தெரிவித்துள்ளது. இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் வெற்றி பெறவில்லை. எனினும் நம்பிக்கை உள்ளது.

தற்போது பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இந்திய திறந்தே வைத்துள்ளது. சில சரக்குகளுக்கு தற்போது வரி உயர்த்தப்பட்டாலும், சில சரக்குகளுக்கு வரியை உயர்த்த ஆகஸ்ட் முதல் மாதம் வரை கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று இந்திய அதிகாரிகளிடம் பேச்சு நடத்த உள்ளது. அப்போது பிரச்சனைகள் தீரும் என்று தொழில் துறையினர் நம்புகின்றனர்.இதே நிலை தொடர்ந்தால் தனது தொழிற்சாலையில் சில வேலைவாய்ப்புகளை குறைக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்