கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - நாசிக் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (16:58 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்தரே தெரிவித்துள்ளார்.

ஜாகிர் ஹுசேன் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 150 நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று  வந்தனர். இந்த நிலையில், ஆக்சிஜன் டாங்கியில் இருந்து விநியோகிக்கப்பட்ட எரிவாயு குழாயில் காணப்பட்ட கசிவை நிறுத்துவதற்காக சுமார் அரை மணி  நேரத்துக்கு ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து கசிவு ஏற்பட்ட இடத்துக்கு தொழில்நுட்ப பொறியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு கசிவு சரிசெய்யப்பட்டது. அப்போது 25 சதவீத ஆக்சிஜன் மட்டுமே மீதமிருந்தது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த பலரும் குறைந்த ரத்த அழுத்தத்தை கொண்டிருந்தவர்கள். அதே சமயம், வென்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சையில் இருந்தவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இல்லை என்று நாசிக் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
 
சம்பவம் நடந்தபோது முதலில் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த எண்ணிக்கை 22 ஆகியிருப்பதாக பின்னர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
"இது ஒரு தொழில்நுட்ப ரீதியிலான விவகாரம். குறிப்பிட்ட ஓரிடத்தில் இருந்தே கசிவு ஏற்பட்டது. அது ஆக்சிஜனின் சீரான ஓட்டத்தின் அளவை குறைத்தது. விரைவில் இந்த பிரச்னை தீரும். நான் ஒரு மருத்துவர். அதனால், மற்ற தொழில்நுட்ப பிரச்னைகள் பற்றி எனக்கு தெரியாது," என்று ஜாகிர் ஹுசேன் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி நிதின் ரெளட் தெரிவித்தார்.
 
சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் 131 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும் 15 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று  வந்ததாகவும் நிதின் ரெளட் கூறினார்.
 
நாசிக் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகியிருக்கும் நிலையில், அந்நகரில் ஒரு நாளைய ஆக்சிஜன் தேவை 13.9 மெட்ரிக் டன் ஆக உள்ளது. ஆனால், நகருக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 84 மெட்ரிக் டன் அளவிலேயே ஆக்சிஜன் கிடைத்து வருகிறது.
 
நோயாளிகளை பறிகொடுத்த உறவினர்கள்
 
மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தையடுத்து அந்த மருத்துவனைக்குள் உயிரிழந்தோரின் உறவினர்களும் சிகிச்சை பெற்று வந்தவர்களின் உறவினர்களும்  பெருமளவில் திரண்டுள்ளனர்.
 
மரண ஓலங்களும், அழுகையுமாக அந்த இடம் சோகம் நிறைந்து காணப்படுகிறது.
 
அமோல் வியாவஹரே என்பவரின் பாட்டி லீலா ஷேலர் (60) வாயு கசிவு சம்பவத்தில் இறந்துள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் தனது பாட்டி இறந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
 
விக்கி ஜாதவ் என்பவரும் தனது பாட்டியை பறிகொடுத்துள்ளார். பாட்டியின் ஆக்சிஜன் அளவு திடீரென குறைந்தபோது மருத்துவமனை ஊழியர்களிடம் அது பற்றி கேட்டேன். அப்போதுதான் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எனக்கு தெரிய வந்தது என்று ஜாதவ் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இது தொடர்பாக பிபிசி மராத்தி சேவையில் இருந்து மேலதிக கள நிலவரம் வந்து கொண்டிருக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்