சீனாவின் ஷூஸு விடுதி கட்டடம் இடிந்த சம்பவத்தில் 17 பேர் பலி

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (13:39 IST)
சீனாவின் கிழக்கே உள்ள ஷூஸு நகரில் விடுதிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.

 
36 மணி தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் புதைந்த 23 பேரில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். கட்டடத்தின் வடிவமைப்பை மாற்றியமைக்க முற்பட்ட உரிமையாளரின் திட்டத்தால் அது பலவீனம் அடைந்து இடிந்து விழுந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில்தான் அந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளதாக கூறுகிறது அந்த நாளிதழ் செய்தி.
 
தொடக்கத்தில் அந்த கட்டடம் மூன்று மாடிகள் கொண்டதாக இருந்தது. ஆனால், பின்னர் அதன் மேல் தளம் ஒவ்வொன்றாக கூட்டப்பட்டதாக அருகே வசிக்கும் குடியிருப்புவாசி ரெட் ஸ்டார் நியூஸ் என்ற ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜியாங்ஸு மாகாண அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஷுஸுவில் உள்ளது சிஜி கையுவான் என்ற விடுதி. இந்த கட்டடம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் இடிந்து விழுந்தது. அங்கு மீட்புப்பணியில் 600க்கும் அதிகமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். 54 அறைகள் கொண்ட விடுதியில் 18 பேர் இருந்ததாகவும் பிறகு அங்கு ஆவணத்தில் பதிவு செய்யப்படாத மேலும் சில விருந்தினர்கள் இருந்ததும் தெரிய வந்தது.
 
இவர்களில் உயிருடன் மீட்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது. சீனாவில் பலவீனமான கட்டுமானத்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஆண்டு ஃபுஜியான் மாகாணத்தில் விடுதி கட்டடம் இடிந்து விழுந்ததில் 29 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கட்டடம் வலுவிழந்தே சம்பவத்துக்கு காரணம் என்று புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்