பாண்டா கரடிகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம் - சீனா

சனி, 10 ஜூலை 2021 (10:41 IST)
பாண்டா கரடிகள் இனியும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் கிடையாது. ஆனால் பாதிக்கப்படக் கூடிய உயிரினங்களில் ஒன்று என சீன அதிகாரிகள்  கூறியுள்ளனர்.

பாண்டா கரடிகளின் எண்ணிக்கை 1,800-ஐக் கடந்து இருப்பதால் அதை அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
 
பாண்டா கரடிகளின் வாழ்விடங்களை விரிவுபடுத்தியது போன்ற நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கைகளால், சீனா, தன் நாட்டுக்கே உரிய குறியீட்டு விலங்கினமான பாண்டா கரடிகளைக் காப்பாற்றியுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
பாண்டா கரடிகளை சீனா, தன் நாட்டின் தேசிய சொத்தாகப் பார்க்கிறது. சீனா பல நாடுகளுக்கு ராஜீய உறவுகளைப் பேணும் வகையில் ஒரு குறியீடாக பாண்டா  கரடிகளைக் கொடுத்திருக்கிறது.
 
"சமீபத்தில் பாண்டா கரடிகளை அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இருந்து நீக்கியது, அதன் வாழ்விட சூழல் மேம்பட்டு இருப்பதையும், அதன்  வாழ்விடங்களை ஒருங்கிணைத்து வைப்பதற்கான சீனாவின் முயற்சியையும் காட்டுகிறது" என ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார் சீனாவின் சூழலியல்  அமைச்சகத்தின் அதிகாரி குய் ஷுஹொங்.
 
கடந்த 2016ஆம் ஆண்டே, பாண்டா கரடிகளை அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினம் என்கிற பட்டியலில் இருந்து பாதிக்கப்படக் கூடிய உயிரினங்கள் பட்டியலில்  சேர்த்தது IUCN எனப்படும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம். அதன் பிறகு தற்போதுதான் சீனா பாண்டா கரடிகளை பாதிக்கப்படக் கூடிய  உயிரினங்கள் பட்டியலில் சேர்த்து இருக்கிறது.
 
இப்படி பாண்டா கரடிகளை வேறு பட்டியலில் சேர்க்கும் போது, அதை பாதுகாக்கும் முயற்சிகள் தளர்த்தப்பட்டதாக மக்கள் கருத வாய்ப்பு இருக்கிறது என சீன அதிகாரிகள் வாதிட்டனர்.
 
சீனாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பாண்டா கரடி தொடர்பான இந்த வார அறிவிப்பு, ஸ்விட்சர்லாந்தின் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அமைப்பின் விதிகளுக்கு சமமான படிநிலைகளைப் பின்பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சீனா முதல் முறையாக பாண்டா கரடிகளை தன் அழிவின் விளிம்பில்  இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் இருந்து மாற்றி இருக்கிறது சீனா.
 
இந்த செய்தியைக் கேட்டு சீன சமூக வலை தளப் பயனர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாகவும், அதற்கு இதுவே சான்று எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
"இது பல ஆண்டு கால கடின உழைப்பின் பலன். பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என ஒருவர் சீனாவின் ட்விட்டர் என்றழைக்கப்படும்  வைபோவில் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
 
சீனா மூங்கில் காடுகளை மீண்டும் உருவாக்கியது தான் இந்த வெற்றிக்குக் காரணம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். மூங்கில்தான் பாண்டா கரடிகளின் 99 சதவீத  உணவு. மூங்கில் இல்லை எனில் பாண்டா கரடிகள் பட்டினிதான் கிடக்க வேண்டி இருக்கும்.
 
விலங்கியல் பூங்காக்களிலும் பிடித்து வளர்க்கும் முறையில் பாண்டா கரடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 1950ஆம் ஆண்டு முதல் சீன அரசு, உலகம் முழுவதும் அரசியல் ரீதியிலான நட்பு வட்டத்தைப் பெருக்க பாண்டா கரடிகளை பயன்படுத்தியதும் இங்கு  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்