அடுத்த ஐந்து ஆண்டுகளில் சீனா எதிர்கொள்ளும் பெரிய சவால்கள்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (16:35 IST)
தனிமனித வாழ்வானாலும் ஒரு நாட்டின் வளர்ச்சியானாலும் திட்டமிடுதல் மிகுந்த அவசியமாகிறது. பொருளாதாரத்தை அடித்தளமாக கொண்டு இங்கும் இந்த உலக சக்கரத்திற்கு திட்டமிடல் அச்சாணி என்றால் மிகையில்லை.

ரஷியப் புரட்சிக்குப் பிறகு திட்டமிட்ட பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க சோவியத் ஒன்றியம் முடிவெடுத்த போது முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள், ஒரு நாடு தனது பொருளாதாரத்தையோ வளர்ச்சியையோ திட்டமிடுவது சாத்தியமே இல்லை என்று கூறினர். அத்தகைய முதலாளித்துவ வாதத்தை முறையடித்துக் காட்டி உலகம் இன்று திட்டமிட்ட பொருளாதாரம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டுக்கும் பெரும் பங்கு ஆற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
 
அதன்பின் பல சோசலிச நாடுகள் மற்றும் சீன மக்கள் குடியரசு திட்டமிடுதலை அமலாக்கி வருகிறது. தனது வளர்ச்சி நிலைக்கு ஏற்றவகையிலும் பன்னாட்டு பொருளாதார நிலைமைகளை கணக்கில் கொண்டும் அவ்வப்பொழுது  திட்டமிடல் முறைகளில் உரிய மாற்றங்களையும் சீன மக்கள் குடியரசு மேற்கொள்கிறது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசை நிறுவிய பின்னர் 1952 வரை ஒரு பொருளாதார மீட்பு காலம் இருந்தது. 1953 ஆம் ஆண்டிலிருந்து முதல் ஐந்து ஆண்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் ஐந்து ஆண்டு திட்டத்தின் (1953-57) இலக்கு, உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்காக போராடுவதோடு, கனரக தொழில்துறை (சுரங்க, இரும்பு உற்பத்தி மற்றும் எஃகு உற்பத்தி) மற்றும் தொழில்நுட்பங்களை சார்ந்ததாக இருந்தது.. இதுவரை, சீனாவில் 13 ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 11-வது ஐந்தாண்டுத் திட்டம் முதல், இந்த திட்டத்தில் திட்ட வரைவுகள் முக்கியமாக இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், நீண்டகால வளர்ச்சி திட்ட வரைவுகள் முன்னதாக வகுக்கப்படும். அடுத்து, கடந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் நடைமுறையாக்கம், சமூக வளர்ச்சித் தேவையின் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் திட்ட வரைவு இயற்றப்படும். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளின் படி, திட்ட வரைவு திருத்தப்பட்டு முழுமைப்படுத்தப்படும். இதற்குப் பிறகு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு அமர்வுக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு ஆவணம் உருவாக்கப்படும். கடைசியில், இந்த திட்ட வரைவு ஆவணம், சீனத் தேசிய மக்கள் பேரவைக்கு வழங்கப்பட்டு, இப்பேரவைக் கூட்டத் தொடக்கத்தில் விவாதிக்கப்ப்ட்டு வாக்கெடுப்பதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்தால், ஓர் ஐந்தாண்டு வளர்ச்சித் திட்ட வரைவு அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும்.
 
2016ஆம் ஆண்டு சீனாவின் 13-வது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டத்தில், ஓரளவு வசதியான சமூகத்தை முழுமையாக உருவாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக உலகம் இந்த ஆண்டு எதிர்கொண்ட பெரும் தொற்று காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் சீனா இந்த ஆண்டு  4.4 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
 
2020 ஆம் ஆண்டில் இதுவரை சாதகமான வளர்ச்சியைக் காட்டிய உலகின் ஒரே ஒரு நாடு சீனா தான் என்றாலும், தொற்று நோய் பரவலால் போராடும் உலகளாவிய சந்தை அதன் மேலதிக வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. இந்நிலையில் 13வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் முடித்து, 14வது ஐந்தாண்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில், சீனா தீவிரமாக களமிறங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சீனா பல முக்கியமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 
 
சீனாவின் நிதி அல்லாத கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டு 25 விழுக்காடு உயர்ந்து கிட்டத்தட்ட 300 சதவீதமாக அதிகரிக்கும் என்று சீனாவின் தலைமை பொருளாதார வல்லுனர் வாங் தாவோ செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூன் மாதத்தில் இதேபோன்று வெளியிடப்பட்ட ஒரு கணிப்பிலும் இந்த ஆண்டு மொத்த கடன் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் வளர்ச்சி இலக்கை அடைய சீனா அதிக கடன் தொகையைப் பயன்படுத்த தயங்குகிறது. கார்ப்பரேட் கடன்களின் வளர்ச்சி, குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் சீனா எச்சரிக்கையாக உள்ளது. தொற்றுநோய் பரவல் காலத்திலும் கடன் பெற்றவர்கள் மீண்டும் எளிதாக கடன் பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர். 
 
சீனாவின் மத்திய வங்கி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற-ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகஸ்ட் மாதத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான புதிய நிதி விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளின்படி "மூன்று சிவப்பு கோடுகள்" பெற்ற நிறுவனங்கள் அதிக கடன் வாங்க தடை விதிக்கப்படும். 14வது ஐந்தாண்டு திட்ட கொள்கைகளை வகுக்க இணையத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற முயற்சி மேற்கொண்டது. ஆகஸ்ட் 16 முதல் இரண்டு வாரங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அந்நாட்டின் பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மேம்பட்ட சமூக பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சினைகள் சீன மக்களின் முக்கிய கவலைகளாக இருக்கின்றன. வயதான மக்கள் தொகை (65 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 2010-2015 ஆம் ஆண்டில் 8-9 சதவீதத்திலிருந்து 2025 ஆம் ஆண்டில் 14 சதவீதமாக உயரும் நிலையில் உள்ளது. 
 
இதனால், முதியோர் பராமரிப்பு மற்றும் சமூக காப்பீட்டிற்கான சீனாவின் செலவு வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  இது ஓய்வூதிய முறையை மேலும் சீர்திருத்த வேண்டும் என கருதுகின்றனர். இதற்கிடையில், பிராந்திய வளர்ச்சி இடைவெளி மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட சமநிலையற்ற வளர்ச்சி உள்நாட்டு சந்தையை உயர்த்துவதற்கும் நகரமயமாக்கலை உணர்ந்து கொள்வதற்கும் தடையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்