கடந்த வெள்ளிக்கிழமை, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ஏற்பட்ட நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலநடுக்கத்தில் 2,700 பேர் பலியாகியுள்ளதாகவும், இதுவரை 10,000 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 26 வயது இளைஞர் ஒருவர் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டார். நிலநடுக்கத்தின் போது ஹோட்டல் இடிந்து விழுந்ததில் அதில் இந்த இளைஞர் சிக்கிக் கொண்டதாகவும், ஐந்து நாட்களாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது.
தரை பகுதி வழியாக துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி, அதன் வழியாக அவர் மீட்கப்பட்டதாகவும், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுயநினைவுடன் இருந்தாலும், அவர் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார். அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட அவருக்கு மேலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.