கொரோனா வைரஸ்-க்கு காரணமாக சமூக வலைத்தளங்களில் ஓடுகளிலிருந்து வௌவால்கள் பறக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில் அதன் உண்மை பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், 425க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா, தைவான், ஹாங்காங், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் உருவாக காரணம் இதுதான் என ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், ஒரு வீட்டின் மேற்கூரை ஓடுகளை சுத்தம் செய்யும் போது நூற்றுக்கணக்கான வௌவால்கள் பறக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த வீடியோ 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை கட்டிட காண்ட்ராக்டர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் சீனாவின் ஊகான் பகுதியில் உள்ள கடல் உணவு சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவும் இந்த வீடியோவில் உள்ள செய்தி உண்மை அல்ல என தெரியவந்துள்ளது.