வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது.
இந்த படத்தை பல பிரச்சனைகளுக்கு நடுவே போராடி வெளியேக் கொண்டுவந்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. பட வெளியீட்டின் போது படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களைப் பற்றி அவர் பல நேர்காணல்கள் கொடுத்திருந்தார். ஆனால் ரிலீஸுக்குப் பிறகு அவரை பற்றி சிம்பு மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் அதிகமாகப் பேசவேயில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் மாநாடு திரைப்படம் குறித்து பேசிய வெங்கட்பிரபு “நான் ஐந்து ஆண்டுகளாகப் படவாய்ப்பு இல்லாமல் இருந்தேன். அப்போதுதான் எனக்கு மாநாடு பட வாய்ப்புக் கிடைத்தது. அந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர்தான் காரணம்” எனக் கூறியிருந்தார். அதில் கூட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பற்றி ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை.
இந்நிலையில் இந்த கருத்தைப் பகிர்ந்துள்ள சுரேஷ் காமாட்சி “எவ்வளவோ பாத்தாச்சு. கடந்து செல்வோம்” என தனது முகநூல் பக்கத்தில் விரக்தியோடு பகிர்ந்துள்ளார்.