சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று பேச ஆரம்பித்து “சில இடங்களில் இசை உயர்ந்து நிற்கும்.. சில இடங்களில் மொழி உயர்ந்து நிற்கும். இதைப் புரிந்தவன் ஞானி. புரியாதவன் அஞ்ஞானி” என்று பேசினார். இது இளையராஜாவை மறைமுகமாக தாக்குவது போல இருப்பதாகக் கண்டனங்கள் எழுந்தன.
கங்கை அமரன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான இசைஞானி ரசிகர்கள் வைரமுத்துவை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதுபோல வைரமுத்துவுக்கு ஆதரவான கருத்துகளும் வெளிவந்தன. இந்நிலையில் இந்த பிரச்சனை பற்றி இப்போது பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “இது தகப்பன்களுக்கு இடையிலான சண்டை. மகன் உள்ளே வரக்கூடாது” எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ” கல்வியா வீரமா செல்வமா? என மறுபடியும் சரஸ்வதி சபதம் படம் தான் எடுக்க வேண்டும். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல். இரண்டையும் பிரிக்க முடியாது. தகப்பன்களுக்கிடையிலான பிரச்சனையில் எங்களை கோத்து விடாதீங்க. இது தொடர்பாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.