ஐம்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிரியாவிடைக் கூறும் கலைஞன் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (09:55 IST)
உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி களத்தூர் கண்ணம்மார் என்ற திரைப்படம் வெளியானது. ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த அந்தப் படத்தின் மூலம் கலையுலகிற்குக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமலஹாசன் எனும் கலைஞன். அதன்பின் சிவாஜி, எம்.ஜி.ஆரோடு குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்தார்.

1972 ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம் படத்தில் மீண்டும் நடிகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப் படங்களிலும் நேரடித் திரைப்படங்களில் நடித்து அந்த மாநில ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வெற்றியையும் கண்டார். அதற்கு ஏக் து ஜே கேலியே ஒரு சோறு பதம்.

நடிப்பு மட்டுமில்லாமல் திரைக்கதை, இயக்கம், பாடல்கள் எழுதுதல், நடன இயக்கம்,தயாரிப்பு எனப் பலத்துறைகளில் தன்னை முழுமையாக் ஈடுபடுத்திக் கொண்டு சினிமாவிற்காக தன்னையே அற்பணித்தார்.

ரஜினி தான் அரசியலுக்கு வரப் போவதாக 20 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராத விதமாக அரசியலில் இறங்கினார். அரசியலில் இறங்கிய பின்னர் முன்பே ஒத்துக்கொண்ட இந்தியன் 2 மற்றும் தேவர் மகன் 2 ஆகியப் படங்களில் மட்டும் நடிக்கப்போவதாக முன்பு அறிவித்தார். ஆனால் இப்போது ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியன் 2 வோடு நடிப்பிற்குப் பிரியாவிடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தி கமல் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்