“எனக்கு சாதி வெறி கிடையாது…” பெயர் சர்ச்சை குறித்து இயக்குனர் கௌதம் மேனன்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (09:14 IST)
பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்ட யூட்யூபர் ப்ளூசட்டை மாறன், படத்தை மிக மோசமாக திட்டியிருந்தது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

மாறனின் விமர்சனம் பற்றி ஒரு நேர்காணலில் பேசிய கௌதம் மேனன் “சிம்பு இந்த படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார். முந்தைய படங்களில் இல்லாத அளவிற்கு மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் ப்ளூசட்டை மாறனின் விமர்சனம் மிக மோசமாக இருந்தது. நீங்க ரிவ்யூ செய்யுங்கள் ஆனால் அதை ஒருப்படத்தை இளக்காரம் செய்து செய்யாதீர்கள். அவரை பற்றி பேச வேண்டாம் என பலரும் ஒதுங்கி விடுகிறார்கள். ஆனால் அவர் பேசியதற்கு அவரை இறங்கி செய்துவிட வேண்டுமென தோன்றுகிறது” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனனின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக மாறன் “சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில்..சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர். கௌதம் வாசுதேவ்..மேனன்.” என்று பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து இப்போது கௌதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில் “பிறக்கும் போதே எனக்கு வைத்த பெயர் அதுதான். என் அடையாள அட்டைகளில் அந்த பெயரே உள்ளது. எனது முதல் சில படங்களில் என்னால் முழு பெயரையும் போடமுடியவில்லை. அவைகள் தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் வாரணம் ஆயிரம் திரைப்படம் என் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் அந்த படத்தில் இருந்து இந்த பெயரை பயன்படுத்தி வருகிறேன். மற்றபடி எனக்கு சாதி வெறி இல்லை.” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்