திரைப்பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், கவிஞர் லீனா மணிமேகலை, பின்னணி பாடகி சின்மயி, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி ஆகியோர் சென்னை சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகளான இவர்கள், தாங்கள் கூறிய புகார்கள் குறித்தும், நடந்துவரும் சர்ச்சைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்
அப்போது பின்னணி பாடகி சின்மயி கூறுகையில்,
வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுத்ததற்கு, ஆண்டாள் சர்ச்சையை காரணமாக கூறுவது தவறு. ஆண்டாள் விவகாரத்தில் நான் எந்த கருத்தும் சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் என்னை வைத்து அரசியல் செய்பவர்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் வலி எனக்கு தெரியும். வைரமுத்து யார் என்று பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்னை போல சக பாடகிகள் பலர் இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கிறார்கள். ஏதாவது சொல்லிவிட்டால் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, குடும்பத்தினர் ஒதுக்கி விடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.
வைரமுத்துவை எதிர்த்து நான் குரல் கொடுப்பது இப்போது தான் ஊடகங்களுக்கு தெரியும். அதற்கு முன்பாகவே எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் வைரமுத்து யார், எப்படிப் பட்டவர்? என்பதை தெளிவாக கூறியிருக்கிறேன்.
எனது திருமணத்துக்கு பிறகு கூட ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு வரும்படி வைரமுத்து அழைப்பு விடுத்தார். அப்போது முடியாது என்று கூறினேன். அதற்கு அவர் என்னை கடுமையாக திட்டினார். மிரட்டவும் செய்தார். இதை என் கணவர் மற்றும் மாமனார்-மாமியாரிடம் தெரிவித்தேன். அவர்களது ஆதரவும், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும், ‘மீ டூ’ இயக்கமும் தான் என்னை இப்போது உண்மையை பேச செய்தது.
வைரமுத்து எனக்கு தொல்லை கொடுத்த காலகட்டம் எது? என்பதற்கான ஒரே ஆதாரம் எனது பாஸ்போர்ட் தான். அதில் தான் சுவிட்சர்லாந்து போனது குறித்த ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு இருக்கிறது. சென்னையில் நாங்கள் இதுவரை 10 வீடுகளுக்கும் மேல் மாறிவிட்டோம். அந்த காலகட்டத்தில் நான் பயன்படுத்திய பாஸ்போர்ட் எங்கே போனது என்று தெரியவில்லை. அந்த பாஸ்போர்ட் கிடைத்ததும் நிச்சயம் வைரமுத்து மீது புகார் அளிப்பேன்.