கார்த்தி இதை செய்திருந்தால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது… கஸ்தூரி கொடுத்த அட்வைஸ்!

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (15:19 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த படம் தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீசாகிறது.

அது சம்மந்தமான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்ட போது லட்டு குறித்து கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர். தற்போது திருப்பதியில் லட்டில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ‘லட்டு இப்போது சென்சிட்டிவ்வான விஷயம். அது குறித்து நான் பேச விரும்பவில்லை’ எனக் கார்த்தி சொன்னார். அதை நகைச்சுவையான மொழியில் அவர் பேசியிருந்தார்.

இது குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். திருப்பதி லட்டு பல லட்சம் மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதை சினிமா நிகழ்ச்சிகளில் வேடிக்கைப் பொருளாக பேசுவது சரியல்ல என பேசியிருந்தார். இதையடுத்து கார்த்தி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கார்த்தியின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கார்த்தி மன்னிப்புக் கேட்டது தேவையில்லாதது என தமிழ்நாட்டு ரசிகர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கார்த்திக்கு தெலுங்கில் நல்ல ரசிகர் கூட்டம் உண்டு. அவர் படம் விரைவில் ரிலீஸாகவுள்ளதால் அவர் மன்னிப்புக் கேட்டதை புரிந்துகொள்ள முடிகிறது. நகைச்சுவை என்ற பெயரில் கார்த்தி சர்ச்சையை தவிர்க்கலாம் என நினைத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்துள்ளது.  அந்த கேள்விக்கு அவர் எதிர்வினையாற்றி இருந்தாலோ,அல்லது தொகுப்பாளரை எச்சரித்திருந்தாலோ எந்த பிரச்சனையும் வந்திருக்காது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்