மத்திய அரசு சமீபத்தில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் என்ற சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டம் நாடு முழுவதும் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் இன்று சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிந்து சுமார் 30 பேருக்கு மேல் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. போராட்டக் குழுவினரிடம் அவ்வப்போது அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பினரும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் போராட்டக்குழுவினர் விடுத்த வேண்டுகோள் சிலவற்றை முதல்வர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சிஏஏ போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது