சுங்க கட்டண உயர்வு: டிடிவி தினகரன் அப்செட்!!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:21 IST)
சுங்க கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் நாளை முதல் இபாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இபாஸ் நடைமுறையால் மக்கள் அதிகமாக போக்குவரத்து செய்யாமல் இருந்த நிலையில் இ-பாஸ் ரத்தால் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 21 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 21 சுங்கசாவடிகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சுங்க கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 
 
இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும்.
 
இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்