எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

Mahendran

சனி, 26 ஏப்ரல் 2025 (11:36 IST)
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகிலுள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்கிய சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இந்த தாக்குதலால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகின்ற நிலையில், பிகாரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுக்குச் சக்தி சேர்க்கும் ஆதரவாளர்களையும் கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்குவோம். அவர்கள் உலகின் எந்த ஓரத்தில் ஓடினாலும், இந்தியாவின் கரம் அவர்களைத் தேடி அடையும். இந்தியாவின் உள்ளாற்றலை பயங்கரவாதம் அழிக்க முடியாது. அமைதி மற்றும் பாதுகாப்பே வளர்ச்சியின் அடித்தளம். மீதமுள்ள பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது’ என்றார்.
 
இதற்கிடையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. நேற்று இரவிலும் பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டைப் மீறி இந்திய நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய வீரர்கள் உடனே தீவிரமான பதிலடி அளித்தனர். இதில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
 
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி இருக்க, பாகிஸ்தான் இரண்டாவது நாளாக எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில், இந்திய ராணுவம் உறுதியான எதிர்ப்பை வழங்கி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்