சென்னை மெரினாவில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருப்பதை அடுத்து, காமராஜர் சாலை மூடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்றும், இந்த கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில், இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை மெரினா காமராஜர் சாலை இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மூடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று இரவு 10 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாட வருபவர்களுக்கான வாகன நிறுத்த இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.