ஆதார் எண் இணைக்க பணம் வாங்கினால் நடவடிக்கை! – மின்சார வாரியம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (09:52 IST)
மின்வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய மின்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்கும் அறிவிப்பை சமீபத்தில் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதை தொடர்ந்து ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் சிரமமின்றி தங்கள் மின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்வதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் மின்வாரிய அலுவலகங்கள் சென்று தங்கள் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆதார் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சார வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் எக்காரணம் கொண்டும் ஆதார் எண் இணைக்க வரும் மக்களிடம் பணம் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கியது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், மாற்று திறனாளிகள் வந்தால் அவர்களை க்யூவில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்