ஈன்ற குட்டிகளை நான்கு நாட்களில் கொன்ற தாய் புலி

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (11:45 IST)
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 4 புலிக்குட்டிகளை தாய் புலி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள உத்ரா என்ற பெண் புலி கடந்த 5ஆம் தேதி 4 குட்டிகளை ஈன்றது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்தது. இந்நிலையில் பிறந்த 4 குட்டிகளும் நேற்று முந்தினம் இறந்து கிடந்தன.
 
இதுகுறித்து தகவல் அறிந்த உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து புலிக்குட்டிகளை பிரேத பரிசோதனை செய்தனர். இறந்த குட்டிகளின் கழுத்து மற்றும் வயிறு பகுதிக்கு இடையே காயங்கள் இருந்துள்ளது. தாய் புலியே தனது குட்டிகளை கொன்று இருப்பது தெரியவந்தது.
 
தாய் புலி தனது குட்டிகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வாயினால் கவ்வி தூக்கி செல்லும். அவ்வாறு தூக்கி சென்றபோது ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அதிக அளவில் ரத்தம் வெளியேறி குட்டிகள் இறந்திருக்கலாம் என பூங்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இதுவரை குட்டிகள் இறந்ததில்லை. உத்ரா பெண் புலி 4 குட்டிகளை ஈன்றதும் அவற்றை கண்காணிக்க அதன் இருப்பிடத்தை சுற்றி 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இதில் ஆத்திரமடைந்த உத்ரா தனது குட்டிகளை பாதுகாக்க அழுத்தமாக கடித்து தூக்கி சென்றபோது காயம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதே புலிக்குடிகள் மரணம் அடைய காரணம் என ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்