தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் புனரைமைப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என தொடர்ந்த வழக்கில் கும்பாபிஷேகத்தை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் உள்ள ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும், இந்த கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில் தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், காசி விஸ்வநாதர் கோவில் செயல் அலுவலர் முருகனின் உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராகடர் அளவு மண் அள்ளப்பட்டதால் கோவில் கட்டிடம் உறுதி இழந்துள்ளதாகவும், கோவிலை மறுசீரமைக்க அரசு தரப்பில் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் கோயிலின் நிலை குறித்து தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாமல், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக கூறியுள்ள அவர், புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே அக்கோயிலின் திருப்பணி கமிட்டியார் கும்பாபிஷேக செலவு விவரங்கள் என வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் சிவாச்சாரியார் சம்பளம் ரூ.45 லட்சம் தொடங்கி பல்வேறு செலவுகளும் குறிப்பிடப்பட்டு மொத்தமாக கும்பாபிஷேகத்திற்கு ரூ.1.67 கோடி செலவு என குறிப்பிடப்பட்டிருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K