முழு நேர அரசியல்வாதிகள் இங்கு யாரும் இல்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கமலஹாசன், மக்கள் நீதி மய்யம் தொடங்கியதால் எனக்கு நஷ்டம் தான் என தெரிவித்தார். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல, சோகத்தில் அரசியலுக்கு வந்தவன் என குறிப்பிட்ட அவர், என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள், ஆனால் அரசியல் இருந்து போக வைப்பது கடினம் என்று தெரிவித்தார். கொள்கை கூட்டத்திற்கு இடையே தீப்பந்தம் ஏந்தி செல்ல விரும்பவில்லை என்று கமலஹாசன் கூறினார்.
தேசத்தின் குடியுரிமை ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது என்றும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். எதிரிகளுக்கு கொடுக்கும் மரியாதையை நாட்டில் விவசாயிகளுக்கு கொடுக்கிறோம் என்று மத்திய அரசை கமலஹாசன் விமர்சித்தார்.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு சமமான நிதி பகிர்வு அவசியம் என்று குறிப்பிட்ட அவர், தெற்கு தேய்ந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.