ஆவடியில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான படை வளாகங்கள் உள்ளன. இந்த படை வளாகத்தில் உள்ள விமானப்படை பிரிவில் மயிலாடுதுறையை சேர்ந்த காளிதாஸ் (55) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இவர் வழக்கம்போல விமானப்படை பயிற்சி மையத்தில் 8வது டவரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் இருந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வளாகத்தில் உள்ள மற்ற வீரர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது காளிதாஸ் தொண்டையில் குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தொண்டையில் 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து விமான படை உயர் அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காளிதாஸ் பணிபுரிந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
விமான படை பயிற்சி மையத்தில் பணியில் இருந்த விமானப்படை வீரர் தற்கொலை செய்திருப்பதால், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உயர் அதிகாரிகளின் தொந்தரவு காரணமா, அல்லது குடும்ப பிரச்னை காரணமா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.