மின் இணைப்பு வழங்க கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (19:59 IST)
தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடுமையான போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அதனால் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் அந்த ஆலைக்கு மின் இணைப்பு நிறுத்தப்பட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆலையின் விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்ட இடமும் ரத்து செய்யப்பட்டது.
 
இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறப்பட்டாலும், அந்த ஆலையின் உயரதிகாரி ஒருவர் சமீபத்தில் நீதிமன்றம் சென்று ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மீண்டும் இந்த ஆலை இயங்கினால் அந்த பகுதி மக்கள் கொதித்து எழுந்து பெரும் போராட்டத்தை மீண்டும் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்