பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் பத்து நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சற்றுமுன் துவங்கிய நிலையில், 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்ததாகவும், தட்கல் முறையில் டிக்கெட் விலை பெறுவதற்கு பயணிகள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், கோவை போன்ற மாவட்டங்களுக்கும் தைப்பொங்கலை கொண்டாட செல்லும் போது மக்கள் ஏற்கனவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு ரயில்களை மட்டுமே நம்பி இருந்தனர்.
இந்த நிலையில், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 8.10 மணிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முடிந்து விட்டது. இந்த நிலையில், தட்கல் முறையில் டிக்கெட் பெறுவதற்கு இன்று காலை 10 மணிக்கு முயற்சிக்க பயணிகள் காத்திருக்கின்றனர்.
ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.