தமிழகத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து, நாளை நடைபெற இருந்த ஊரக திறனாய்வு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஊரக திறனாய்வு தேர்வு நாளை, அதாவது டிசம்பர் 14ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி இந்த தேர்வு ஒத்திவைக்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.