புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை: முக்கிய அறிவிப்பு..!

Mahendran
சனி, 16 மார்ச் 2024 (09:52 IST)
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த மாதம் 25ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
 
புதுவையில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் 11ஆம் வகுப்பிலும் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இருந்து மாற்றப்பட்டு, நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புகளில் மட்டும் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டான 2024- 25 முதல், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கல்வியாண்டு நாட்காட்டியும், அரசாணையும் மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களால் முன்னரே வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகள் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 31, 2025 வரை நடைபெறும்.
 
மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31 வரையிலும் மற்றும் மே 1 முதல் 31 ஆம் தேதி வரையிலும் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 3 தேதி முதல் பள்ளிகள் தொடர்ந்தது நடைபெறும். 2024-25 ஆம் ஆண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மார்ச் 25, 2024இல் இருந்து நடைபெற உள்ளது.
 
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்