கூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் ஏற்கனவே பலமுறை பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறி இருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில், அதாவது இயக்குனர், துணை இயக்குனர், துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் சுமார் 10 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக இந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது, மற்றும் ஏஐ ஆதிக்கம் ஆகியவை காரணமாக, டெக்னாலஜி துறையில் உள்ள சவால்களை சமாளிக்க இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக சுந்தர் பிச்சை விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு சுமார் 12,000 கூகுள் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு பணி நீக்கம் என்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் மட்டுமின்றி, உலகின் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருவதால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.