மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 55வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காராமல் பாப்கார்ன் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்கள், அதாவது பாப்கார்ன் இயல்பான சுவையை சர்க்கரை சேர்த்து மாற்றி சுவை கூட்டியிருந்தால், அதற்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பேக் செய்யப்பட்ட அல்லது லேபிள் இடப்படாமல், உப்பு மற்றும் மசாலா கலந்து வழங்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும். அதேசமயம், முன்கூட்டியே பேக் செய்யப்பட்டு லேபிள் இடப்பட்டிருந்தால், 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட அனைத்து பழைய வாகனங்கள் மீண்டும் விற்பனை செய்யும்போது 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. தற்போது இது 12 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, செகண்ட் ஹேண்டில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும்போது வரி அதிகரிக்கும். இது தனிநபர்கள் விற்பனை மற்றும் வாங்குதலுக்கு பொருந்தாது என்றும், நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாம்பல் உள்ளடக்கம் கொண்ட ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் காங்கீட் (ஏஏசி) பிளாக்குகள் ஹெச்எஸ் 6815 குறியீட்டின் கீழ் வரும் என்றும், அதற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.