பாதுகாப்பும், சுதந்திரமும் பெண்களுக்கும் கொடுத்தால் போதும் - டாக்டர் B. தனசேகர்

Sinoj

வெள்ளி, 8 மார்ச் 2024 (19:02 IST)
பெண்களுக்கான முழு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் சீக்கிரம் இந்த உலகம் ஏற்படுத்திக் கொடுக்கும் நாளே உண்மையான மகளிர் தினம் என உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டாக்டர் B. தனசேகர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் மார்ச் மாதம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது சர்வதேச மகளிர் தினம் தான். இந்த மாதம் முழுவதும் பெண்களுக்கு சோசியல் மீடியாவில் ஒரு குரூப் வாழ்த்துச் சொல்வதும், இன்னொரு குரூப் ஆண்கள் தினத்தை இப்படிக் கொண்டாடுகிறீர்களா எனக் கேட்பதும் ஆண்கள் என்றாலே தியாகிகள் தான் எனப் பெரிய போரே நடக்க ஆரம்பித்து விடும். இந்த சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து சொல்வதை விட முக்கியமான ஒரு விடயத்தை பதிவு செய்ய வேண்டுமென்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தக் காணொலியில் இவ்வளவு பெரிய விஷயத்தை ஒரு பொருட்டாக எடுத்து, சமூக ஊடகங்கள் ஏன் அதிகமாகப் பேசவில்லை என்று புரியவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை சமூக ஊடகங்கள் பெரிதாக பேசியே ஆக வேண்டுமென நினைக்கிறேன். ஸ்பெயின் நாட்டில் இருந்து, உலக சாதனைக்காக பைக்கில் உலகத்தைச் சுற்றி வருகின்ற கணவனும், மனைவியும், மார்ச் 1 அன்று,  ஜார்கண்ட் - தும்கா மாவட்டத்தில் இருக்கிற குர்மஹாட் என்கிற ஒரு சின்ன கிராமத்திற்கு பக்கத்தில்  டெண்ட் அமைத்து இரவு தங்கி உள்ளனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை அவருடைய கணவன் முன்னாடியே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  இந்த சம்பவத்தை கணவன் மனைவி இரண்டு பேரும் மருத்துவ மனையில இருந்து கண்ணீரோடு, அவர்களுடைய சமூக வளைதளப் பக்கங்களில் share செய்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்
 
இதில் 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தின் கோபம் அடங்குவதற்குள் புதுச்சேரியில் 9 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த செய்தி வெளிவருகிறது. தாய் நாடு, தாய் மண், பாரத மாதா, நதிகளுக்கு பெண்களின் பெயர்  இப்படி பெண்களைச் சுற்றியே நம் தேச பக்தியை வெளிப்படுத்துகிறோம். ஆனால் பெண்களை வெறும் இச்சைக்காக, சதையாக மட்டுமே பார்ப்பது எவ்வளவு பெரிய கேவலம்?
 
மகளிர் தினம் கொண்டாடுவது பெரிதல்ல, ஏன்? நீங்கள் மகளிர் தினம் கொண்டாடவும் வேண்டாம். எந்தப் பெண்ணும் தன்னை ஆண்கள் கொண்டாட வேண்டுமென்று கேட்கவும் இல்லை. இங்கே பெண் என்றால் அவளும் ஒரு சக உயிர் என்று பாருங்கள். இங்கே அனைத்து இடத்திலேயும் ஆண்களுக்கு என்ன பாதுகாப்பு, என்ன சுதந்திரம் இருக்கிறதோ, அதே பாதுகாப்பும், சுதந்திரமும் பெண்களுக்கும் கொடுத்தால் போதும். இங்க பெண்களை யாரும் சாமி மாதிரி பார்க்க வேண்டாம். சக மனுஷியாகப் பாருங்கள். பெண்களும் தங்களுக்கான பாதுகாப்பு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கான முழு பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் சீக்கிரம் இந்த உலகம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையில், என் சக உயிர் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என டாக்டர் B. தனசேகர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்