பிரேமலதா மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த தே.மு.தி.க.,பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய, பிரேமலதா விஜயகாந்த் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என பிரேமலதாவை உத்தரவிட்டது. இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பிரேமலதா மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது என கூறி, மேலும் இரண்டு வாரத்திற்கு கையொப்பமிட உத்தரவிட்டது நீதிமன்றம்.
மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடித்தற்காக ரூ. 5 ஆயிரம் வழங்கவும் பிரேமலதாவிற்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய கோரியும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பிரேமலதா. மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை காலம் ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்ளமுடியாது, என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.