இந்த நிலையில் உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆட்டோ கட்டணம் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் உள்ள கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது தன்னிச்சையாக கட்டண உயர்வை அறிவித்த சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம் மற்றும் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், போக்குவரத்து துறை ஆணையர், உள்துறை செயலாளர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என அனைவரிடமும் கோரிக்கைகளை வைத்தும் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை.வீட்டு வாடகை, வாகனங்களின் உதிரி பாகங்களின் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, ஆர்.டி.ஓ. கட்டணங்கள் போன்ற விலைவாசி உயர்வுகளை சமாளிக்க முடியாமல், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு ஆட்டோ டிரைவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அதன்படி, முதல் 1.8 கி.மீ.க்கு ரூ.50, கூடுதல் கி.மீ.க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 1 ரூபாய் 50 காசு, இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் இந்த புதிய கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.