பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உணவு டெலிவெரி செய்யும் ஊழியர்கள் போல் உடை அணிந்து வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.
இந்த சம்பவம் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோரை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை புதிய ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார்.
சென்னையில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதல் பணியாக இருக்கும் என்றும் ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது முதல் பேட்டியில் காவல் ஆணையர் அருண் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கையை ஆணையர் அருண் தொடங்கியுள்ளார். அதன்படி பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என்று அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் ஆணையிட்டுள்ளார்.