உறவினர் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் நடத்தும் அதிகாரி… பாமக வேட்பாளர் புகார்!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (11:51 IST)

செஞ்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு அவரது உறவினரான தேர்தல் நடத்தும் அதிகாரி ஆதரவாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செஞ்சி தொகுதியில் திமுக சார்பாக கே எஸ் மஸ்தான் என்பவரும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் எம் பி எஸ் ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாமக வேட்பாளர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில் ‘செஞ்சி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலராகப் பதவி வகிக்கும் நெகருன்னிசா திமுக வேட்பாளர் மஸ்தானின் உறவினர் ஆவார். திமுக வேட்பாளர் வாக்காளர்களுக்கு அரிசி, பணம் கொடுப்பது குறித்துப் புகார் தெரிவித்தபோது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் தெரிவிக்க செல்பேசியில் பல முறை அழைத்தாலும் அழைப்பை ஏற்பதில்லை. ஆனால் வேறு எண்களில் அழைத்தால், அழைப்பை ஏற்றுப் புகார் சொல்வதைக் கேட்கிறார். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அப்போதைய இருப்பிடம், அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் தகவல் தெரிவிக்கிறார். மேலும் அரிசி, பண விநியோகம் செய்வதற்கு திமுக வேட்பாளருக்கு உதவியாகவும் இருக்கிறார். திமுக வேட்பாளரின் தேர்தல் விதிமீறல்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 27-ம் தேதி இரவு 10.45 வரை பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் மீது தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அவர் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டு வருகிறார். அவர் இங்கு தொடர்ந்து பணியில் இருந்தால் நேர்மையாகத் தேர்தல் நடைபெறாது. எனவே அவர்மீது விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்