வடமாநில கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (09:18 IST)
கோவையில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகை பறிக்க முயற்சித்த வடமாநில கொள்ளையனை மடக்கிப் பிடித்த மக்கள் அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி ராதாமணி. இவர் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் விற்பனை செய்து வருகிறார். நேற்று மதியம் அவரது கடைக்கு வந்த இரு வடமாநில வாலிபர்கள்  ராதாமணியிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் எடுக்க திரும்பும்போது அந்த வாலிபர்கள் திடீரென்று கத்தியை எடுத்து இராதாமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை கேட்டு மிரட்டினர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் ராதாமணியை கத்தியால் தாக்கியுள்ளனர்.

இதனால் வலியால் துடித்த அவர் கூச்சல் போடவே அங்கிருந்தவர்கள் கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மீதமுள்ள ஒரு திருடனை பிடிக்க முயன்ற பொதுமக்களை அந்த திருடன் கத்தியால் தாக்கினான். அதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவனை வளைத்து பிடித்த பொதுமக்கள் அவனை சரமாரியாக அடித்து துவைத்தனர். பின் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவன் ஒடிசாவைச் சேர்ந்த துல்லா (27) என்பதும், அங்குள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. 
 
பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வடமாநில வாலிபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்