கோமாளித்தனமாக அமைச்சர்கள் பேசுகிறார்கள்: தினகரன் ஆவேசம்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (10:51 IST)
தமிழக அமைச்சர்கள் கோமாளித்தனமாக பேசுவதாகாவும், அவர்களுக்கு பதில் சொல்லி தனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 
 
அதிமுகவில் எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் ஒன்றிணைந்த பின்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலா, தினகரனை நீக்கினர். இதனையடுத்து தினகரன் தனது ஆதரவாளர்களை வைத்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் தனது கணவரின் உடல் நிலையை காரணம் காட்டி 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. பரோலில் வந்துள்ள சசிகலாவை அரசியல் தலைவர்கள் சந்திக்க கூடாது என்ற நிபந்தனை இருந்தாலும் தினகரன் குடும்ப உறுப்பினர் என்பதால் அவரை சந்திக்க தடை இல்லை என கூறப்படுகிறது.
 
இதனால் தினகரன், சசிகலாவை தினமும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று திருச்சி சென்றுவிட்டு சென்னை திரும்பிய தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் துரோக ஆட்சியில் மக்களுக்கான சாதகமான முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்று எல்லோரும் எதிர்பார்ப்பது போல் நானும் எதிர்பார்க்கிறேன் என்றார்.
 
மேலும் இப்போது கூட்டப்படும் அமைச்சரவை கூட்டத்துக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. முதல்வர் பழனிசாமியும் அமைச்சர்களும் என்னைப் பற்றி பல்வேறு யூகத்துடன் பேசுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். தமிழ்நாட்டில் சிலர் கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லி நான் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார் காட்டமாக.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்