ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்திருப்பார் என்று ஏற்கனவே நேற்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்த நிலையில் தற்போது ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அதே கருத்தை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மாநில உரிமைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர் என்றும், மத்திய அரசால் மாநில உரிமைகள் மறுக்கப்படுவதை அவர் ஒருநாளும் அனுமதிக்க மாட்டார் என்றும், அதேபோல் அண்டை மாநிலத்தின் தார்மீக குரலுக்கு ஆதரவு அளிக்கும் குணம் உடையவர் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். அவர் இந்நேரம் உயிருடன் இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருப்பார். அதனால் முடிவுகள் வேறுமாதிரி இருந்திருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அதேபோல, தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்திருந்தாலும், மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசின் செயற்பாடுகளைக் கண்டித்து, எங்கள் தீர்மானத்திற்கு ஆதரவுகொடுத்திருப்பார் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
மேலும் இன்று ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு செய்யும் துரோகம், நாளை தமிழகத்துக்கு நடக்கலாம் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.