தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜகவை கண்டித்து அதிலிருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக பாஜகவின் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காதது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்தி திணிப்பை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்து வந்த ரஞ்சனா நாச்சியார் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும் நாடு முழுவதும் விரவி மககளுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்தில் சுருங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகம் வேறு தமிழகம் வேறு என்ற மாற்றான் தாய் மனப்பான்மை, இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது.”
“என்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட வேண்டும், தமிழக சிறக்க வேண்டும். மும்மொழி கொள்கை திணிப்பு, திராவிட வெறுப்பு, தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது என்பதையெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு உங்களுடன் இருக்க முடியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K