தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

Mahendran

சனி, 22 பிப்ரவரி 2025 (08:12 IST)
தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம் என மத்திய அரசு வலுக்கட்டாயமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சிக்கு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
முதல்வர் ஸ்டாலின் நேற்று வடலூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய போது, "ஏராளமான தடைகளை உருவாக்கி தமிழர், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க பார்க்கிறார்கள்," என்றும், "தமிழ்நாட்டு மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
 
"கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்," என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுரை சொல்கிறார். நான் கேட்கிறேன், "கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா?"
 
"மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தருவோம்" என்று பிளாக்மெயில் செய்வதற்கு பெயர் அரசியல் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
"தமிழ்நாட்டில் இருந்து வரி தர மாட்டோம்" என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும். கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடிப்பதால் நாங்கள் அவ்வாறு சொல்லவில்லை. அதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் மத்திய அரசில் இருப்பது இந்தியாவுக்கே பெரிய சாபக்கேடு," என்றும் அவர் தெரிவித்தார்.
 
"தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம்! தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள். திமுக இருக்கும் வரை தமிழ் இனத்திற்கு எதிராக எந்த செயல்பாடுகளும் வர முடியாது," என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்