மூன்றாவது நீதிபதி நியமனம் - யார் இந்த விமலா?

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:44 IST)
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.  
 
அந்நிலையில், நேற்று இரவு தற்போது மூன்றாம் நீதிபதியாக விமலாவை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்துள்ளார். இவரது தீர்ப்பு வெளியாக சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், நீதிபதி விமலாவின் பின்னணியும், பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
1957ம் ஆண்டு பிறந்த நீதிபதி எஸ்.விமலா முனைவர் பட்டம் பெற்றவர். 1983ம் ஆண்டு கடலூர் மற்றும் சிதம்பரத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர். அதேபோல், கடந்த 2002ம் ஆண்டு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.

 
2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவர் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின் 2011ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2013ம் ஆண்டு நிரந்தர நீதிபதி ஆன  இவர் பெண்களின் முன்னேற்றத்தில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டர்.
 
குடும்ப நலம் சார்ந்த வழக்குகள், பெண்கள் பாதுகாப்பு, உரிமை தொடர்பான வழக்குகளிலும் இவர் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதோடு, விபச்சார வழக்கில் கையாளப்பட வேண்டிய சட்ட விதிமுறைகளையும் வகுத்துள்ளார்.
 
தற்போது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு இவர் தலைமை வகித்து வருகிறார்.  சிறுமி ஹாசினி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கை இவரின் தலைமையிலான அமர்வுதான் விசாரித்து வருகிறது. 
 
இந்நிலையில்தான், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவரின் தீர்ப்பு தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்