புதுவையில் இரண்டு மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டிய நிலையில் புதுவையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் புதுவை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் புதுவையில் நேற்று இரவு திடீரென இரண்டு மணி நேரத்தில் 15 சென்டிமீட்டர் மழை பெய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
புதுவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும் இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்ததாகவும் தெரிகிறது. கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது உடன் மழை நீர் சில வீடுகளுக்கும் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என புதுவை கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கிய இடத்தில் உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.