எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று வெளிநாடு கிளம்பும் முதல்வர் – விமர்சனங்களுக்கு பதில் சொல்வாரா ?

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:01 IST)
பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். இதனால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர் செல்வமா அல்லது முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் வேலுமணியா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்தது. முதல்வர்கள் வெளிநாடுகளுக்கு இதுபோல் செல்லும்போது பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம்.ஆனால் இம்முறை அந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாது எனவும் வெளிநாடுகளில் இருந்த படியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பார் என்றும் முக்கியமானக் கோப்புகள் அனைத்தும் பேக்ஸ் மூலம் அவரிடம் கையெழுத்து வாங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த செயல் கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. திமுக, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் முதல்வரின் பயணத்தை விமர்சனம் செய்துள்ளன.

அதேப்போல பாஜக, பாமக, சமக ஆகியக் கட்சிகள் இந்த பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டப்படி இன்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சென்று அங்கிருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார் முதல்வர். இந்த பயணத்தில் முதலீடுகளைக் கவர்ந்து தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிப்பாரா ?

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்