எங்களுக்கு சிவப்பு, கருப்பு எல்லாமும் வேண்டும்! – பாஜக அண்ணாமலை!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (11:17 IST)
வண்ணங்களை மையப்படுத்தி பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆ.ராசா பேசியதற்கு பதில் தரும் வகையில் பாஜக அண்ணாமலை பேசியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்கட்சிகளாக உள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுகவின் ஆ.ராசா தமிழகத்தில் கருப்பு, சிவப்பு, நீலம் ஆகியவை இணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என பேசினார்.

திராவிடம், கம்யூனிசம், அம்பேத்கரிசம் ஆகியவற்றை மூன்று வண்ணங்களை உவமையாக காட்டி அவர் பேசியிருந்த நிலையில் அதற்கு பதில் தரும் வகையில் பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “கருப்பு, சிவப்பு, நீலம் மட்டுமல்ல.. அனைத்து வண்ணங்களுமே பாஜகவுக்கும் தேவை. அனைத்து கருத்துகளையும் நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடியின் பொங்கல் நிகழ்ச்சி குறித்து பேசிய அவர் “தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றியே பிரதமர் மோடியின் பொங்கல் விழா நடைபெறும், அரசின் விதிகளில் 1 சதவீத்ததை கூட பாஜக மீறாது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்