நெல்லை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய நீட் தேர்வு ரத்து என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் 13 இடங்களிலும், மாநகர் பகுதியில் 40 இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மாநகரில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல் புறநகர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.