வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ஆந்திரா நோக்கி செல்வதாக வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் நிலவும் புயல் சின்னம் அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பின்னர் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் நெல்லூர் அருகே வடக்கு நோக்கி நகர வாய்ப்பு இல்லை என்றும், ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்கும் இந்த புயல் சின்னம் மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும், டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, தமிழக கடற்கரை பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர், அதாவது டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் சென்னைக்கு மீண்டும் ஒரு பலத்த மழை வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.