ஆந்திர மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு மின்சார பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாக கூறிய நிலையில், அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ஆண் பிணம் ஒன்று இருந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாக துளசி என்ற இளம் பெண் வீடு கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு கட்டுமான பொருட்களை வழங்கி வந்த நிறுவனம் மின்சார உபகரணங்களை அனுப்பி உள்ளதாக மெசேஜ் அனுப்பியது. இதனை அடுத்து, ஒரு பார்சல் தன்னுடைய வீட்டிற்கு வந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த பார்சலை பிரித்துப் பார்த்தார்.
மின்விளக்குகள், மின்விசிறி போன்ற பொருட்கள் வரும் என்று அவர் காத்திருந்த நிலையில், அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 45 வயது ஆண் பிணம் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும், அந்த பிணத்துடன் ஒரு கொலை மிரட்டல் கடிதமும் இருந்ததாகவும், அதில் 1.30 கோடி ரூபாய் கேட்டு மிரட்டப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து நாக துளசி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், மின்சார பொருட்களை சப்ளை செய்த நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த பெட்டியில் இருந்த பிணம், நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் இறந்திருக்கும் நபராக இருந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், அந்த பகுதியைச் சுற்றி 45 வயது மதிக்கத்தக்க யாராவது காணாமல் போய் உள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.