டெல்லியில் அதிமுக அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் திறந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அதிமுக கட்சி அலுவலகம் அமைக்க கடந்த சில ஆண்டுகளாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், தற்போது அந்த அலுவலகம் தயாராகிவிட்டது. புதிதாக கட்டப்பட்ட டெல்லி அதிமுக கட்சி அலுவலகம் "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவி அம்மா மாளிகை" என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை, சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் சற்று முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012 ஆம் ஆண்டு, டெல்லியில் அதிமுக அலுவலகம் அமைக்க ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அந்த நேரத்தில், மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. டெல்லி அதிமுக அலுவலகத்தை கட்ட, ஜெயலலிதா தீவிர பணிகளை தொடங்கிய நிலையில், தற்போது தான் இந்த கட்டிடம் முடிவுக்கு வந்துள்ளது.
கூடுதல் தகவலின்படி, இந்த கட்டிடம் ₹10 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மாடிகளை கொண்ட இந்த கட்டிடம், பொலிவுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.