ஒரு மசோதாவை ஒரு சில ஆண்டுகள் நிறுத்தி வைத்தால், அந்த மசோதா செல்லாதவையாக ஆகிவிடுகிறது. அவ்வாறு செல்லாத மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது ஏன் என ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று தமிழக அரசு தரப்பிலும், ஆளுநர் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
"ஆளுநர் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிவிக்காமல், மறு ஆய்வு செய்ய திருப்பி அனுப்புவது எப்படி? மசோதாவில் உள்ள முரண்பாட்டை அரசிடம் ஆளுநர் வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, "மசோதாவில் சில விஷயங்கள் சரியாக இல்லை, முரண்படுகிறது என எண்ணினால் என்ன செய்வது? அதனால் தான் முடிவு எடுக்கவில்லை" என்று கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை இல்லை. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதை அரசியல் சாசனத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர். மேலும், "ஒரு மசோதாவை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்தால், அது செல்லாத மசோதா ஆகிவிடும். அவ்வாறு செல்லாத மசோதாவை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பினீர்கள்?" என்ற கேள்வியும் நீதிபதிகள் எழுப்பினர்.